புதினம் தெரியுமோ? டெங்குக் காய்ச்சலை மாத்தவெண்டு ஆஸ்பத்திரிக்குப் போனால்..

0
58

குளிக்கப் போய்ச் சேறு பூசின கதைமாதிரி டெங்குக் காய்ச்சலை மாத்தவெண்டு ஆஸ்பத்திரிக்குப் போனால் அங்க இன்னமும் வருத்தத்தைக் கூட்டிற மாதிரி நுளம்புகள் படையெடுக்குதாம். அதுவும் டெங்கு வார்ட்டிலதான் இந்த நுளம்புப்படையெடுப்பு கூடவா இருக்கு.

மந்திகை. யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியளில உள்ள டெங்கு வார்ட்டில இருக்கிறவை, இந்த நுளம்புக்கடி தாங்கேலாமல் வருத்தம் மாறமுதலே ரிக்கெற் வெட்டிக் கொண்டு பிரைவேட்டா போய் காட்டுகினம் எண்டும் கதையடிபடுது.

அதோட டெங்கு வார்ட்டுக்குள்ள வாற நுளம்புகள் பக்கத்துக்கு வார்ட்டுகளுக்கும் அப்பிடியே விசிட் பண்ணி, எல்லாரையும் ஒரு குத்துக் குத்தி சுகம் விசாரிக்காமல் போகாயினம். இப்பிடி நுளம்புகளின்ர சுக விசாரிப்பால, நோர்மல் வருத்தமெண்டு வந்தவையும் டெங்கால பாதிக்கப்படுகிற நிலைமை வந்திருக்கு.

எல்லா ஆஸ்பத்திரியளிலையும் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த, வகை தொகையில்லாமல் புகையடிச்சபடி தான் இருக்கினம். அதுக்கும் டிமிக்கி குடுத்திட்டு, இப்பிடி ஓயாத அலையா நுளம்புகள் பாயுதெண்டால் எங்கையோ பிழை இருக்கெண்டுதான் அர்த்தம். இந்தமுறை வந்திருக்கிற டெங்கு நுளம்புகள் கொஞ்சம் அப்டேட்டான நுளம்புகள் எண்டு சொல்லுகினம்.

முந்தின நுளம்புகள் இளநீர்க்கோம்பை, தொட்டி, ரின், சட்டி, சிரட்டை, குட்டை எண்டு மழைத்தண்ணி தேங்கக்கூடிய இடங்களிலதான் குடியிருப்பினம். அதால அவையைக் கண்டுபிடிச்சு அழிக்கிறது சுகம்.ஆனால் இப்ப மரப்பொந்துகளுக்கையும் டெங்கு நுளம்புகள் ஒளிச்சிருந்து கெரில்லாத் தாக்குதல் செய்யிறதால எப்பிடி உதுகளை அழிக்கிறது எண்டு சுகாதாரத் திணைக்களக்காரர் தலையைச் சொறியினமாம்.

ஆனால் மந்திகை, பெரியாஸ்பத்திரிக்க வாற நுளம்புகள் உப்பிடி மரப்பொந்துக்க ஒளிச்சிருக்கேலை. அவை இருக்கிற இடம் ஆஸ்பத்திரிக்கு பக்கத்தில உள்ள வடிகால்கள் தான். அதிலையும் பெரியாஸ்பத்திரியில தான் ஆகலும் கடுமை.

கோட்டையைச் சுத்தி அகழி இருக்கிறமாதிரி பெரியாஸ்பத்திரியைச் சுத்தி அரைவாசிக்கும் ஒரு பெரிய வடிகால் இருக்குது. எவ்வளவுதான் அதைக் கிளீன் பண்ணினாலும் அது நுதம்பிப்போய், சேறும் சகதியுமாத்தான் இருக்கும். அந்த வாய்க்காலை நாற வைக்கிறதில பெரும் பங்கு நாகவிகாரைக்குத்தான் இருக்கு.

ஆரியகுளம் சந்தியில இருக்கிற விகாரைக்குப் பக்கத்தில உள்ள கட்டடத்திலதான் ரூர் வாற சிங்கள ஆக்கள் கூடுதலா நிக்கிறைவை. அவையின்ர கழிவுத்தண்ணியள், மலக்கழிவுகள் எல்லாம் இந்த வாய்க்காலுக்குள்ள அப்பிடியே நேர போறதாலதான் அது எப்பவும் கூவம் மாதிரி நாறிக்கொண்டிருக்குது.

இப்பிடி நாறி நுதம்பிக் கிடக்கிற இடத்தைக் கண்டிட்டு டெங்கு நுளம்புகள் சும்மா இருப்பினமோ? வேற இடங்களில இருக்கிற நுளம்புகளையும் கூப்பிட்டு, எல்லாரும் இந்த வாய்க்காலுக்குள்ள கூடியிருந்து கும்மியடிச்சுப் போட்டு, பின்னேரத்திலையும், காலமையிலையும் மெல்லப் பறந்துபோய், பக்கத்தில உள்ள ஆஸ்பத்திரியில நல்லா ரத்தம் குடிச்சு, சொகுசா இருக்கினம்.

உந்த வாய்க்காலை வடிவாக் கிளீன் பண்ணி, விகாரைக்குள் வாறவையின்ர கழிவு அதுக்க போகவிடாமல் பாத்தாலே டெங்கால வாற பாதிப்பை அரைவாசிக்கும் மேல கட்டுப்படுத்தலாம்.

ஆனால் இப்ப சிக்கல், ஆர் சொல்லி விகாரைக் கழிவை வாய்க்காலுக்க வரவிடாமல் செய்யிறது எண்டதுதான். பிக்குவுக்கு மணி கட்டுறது ஆர்?

Auto Draft-oneindia news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here